Saturday 1 March 2014

நெஞ்சம் பொறுக்குதில்லையே..!!! nenjam porukuthillaiyae..!!!

nenjam porukuthillaiyae

--நெஞ்சம் பொறுக்குதில்லையே--

தீராத நோயாக 
மாறாத சாபமாய் 
பணமெனும் விஷம் 
மனித ஜாதிக்குள் !! 

வாக்குகள் கால் குப்பி 
மதுவிற்கு விற்பனையாகிறது 
தேசமோ கட்சிகளிடம் 
அடகு போகிறது !! 

கட்சிகளோ உரிமைகளையும் 
நசுக்கி நம்மை 
அடிமையாக்கி ஆளுகிறது !! 


உயிர் நீத்து பெற்ற 
சுதந்திரம் எங்கே ? 

நல்ல தலைவனை 
பொம்மையாக அரியணையில் 
அமர்த்தி பொம்மலாட்டம் 
ஆடும் அரக்கர்கள் காலிலே !! 


விழுப் புண்ணை அணிகலனாக 
அணிந்த வீரம் எங்கே ? 

தூங்குகிறது நிம்மதியாக 
மெத்தையிலும் மதுவிலும் 
வீறுகொண்டு எழுகிறது 
தெருவிலே மங்கையிடமும் 
சாதிச் சண்டையிலும் !! 


எல்லையிலே அத்து மீறல் 
கோட்டையிலே நாட்டை 
விற்க பேச்சு வார்த்தை 
ஆனால் 
காதலுக்காக போராடும் 
குருட்டு சமூகம் !! 


மதத்தை மைதானமாக்கி 
சாதியை இரையாக்கி 
தேசத்தை வேட்டையாடும் 
அரசியல் ஓநாய்கள் !! 


தேசியக் கொடியை 
தலைக் கீழாக தொங்கவிடும் 
தேசபிதாக்கள் !! 

இவர்களின் மத்தியிலே நான் 
என்ன செய்வது ? 

ஊழலை தட்டி கேட்க 
நாதியில்லை 
விஸ்வரூபம் படத்திற்கு 
விஸ்வரூபமெடுக்கும் !! 

தாய் மொழி காக்க 
வக்கில்லை 
தலைவா படத்திற்கு 
தீக்குளிக்கும் !! 

இந்த மூடர் கூட்டமே 
நாடெங்கிலும் !! 


வேர்வை சிந்தியும் 
வயிறு நிறையாமல் சாகும் 
உழைப்பபாளியின் மரணத்தில் 
மகிழ்ச்சியுறும் முதலாளிகள் !! 


சாமியையெல்லாம் கண்ணைக்கட்டி 
காட்டுக்கு அனுப்பிவிட்டு 
காவியணிந்து களியாட்டமாடும் 
போலிச் சாமியார்ககளுக்கு 

சிறையும் அந்தபுரமாம் 
நீராட கங்கை நீராம் !! 

இன்னும் எத்தனை எத்தனையோ 
அவலங்கள் 
கண் முன்னே கணக்கிட்டு 
எழுத முடியவில்லை 
தீர்ந்தது என் பேனாவின் மை !! 

இவையெல்லாம் 
காணும் போது என் 
நெஞ்சம் பொறுக்கு தில்லையே !! 


வீர வாளாய் பிறந்தும் 
உறையிலே உறங்குவதா ? 

மறக்குடி மங்கையெனக்கு 
வேண்டாம் 
அந்த அவப் பெயர் !! 

நான் 
எழுதுகோலை வாளாக்கி 
எழுத்துக்களால் பட்டைதீட்டி 
போராடப் போகிறேன் !! 

நீங்கள் எப்படி ?? 

இனியொரு மாகத்மாவோ 
நேதாஜியோ பகத் சிங்கோ 
பிறக்க மாட்டார் மண்ணில் 
எல்லோரும் உன்னில் !! 

விருப்பம் உங்களுடையது 
ஆனால் 
தேசத்தின் தலையெழுத்து 
உன் கையில் 
மறந்துவிட வேண்டாம்!!

---- சுதா ----

Monday 24 February 2014

தலைப்பில்லா கவிதைகள்..!!!

orphans


தலைப்பில்லா கவிதைகள்... 

புவியெங்கும் விதைத் தூவும் 
வாயுதேவனே . 
இம்மொட்டுகளை விதைத்து யார்...!!!! 

காப்பகத்தில் 
பிஞ்சுகளெல்லாம் கைதிகளாய் 
தீர்ப்பெழுதியது 
காலமும் காமமும் ..!!!! 

சிறைவாசி 
சிறைக் கம்பியை எண்ணுகிறான் 
இப்பூக்களெல்லாம் 
ஜன்னல் கம்பியை எண்ணுகிறது..!!! 

ஒரே கூட்டில் சிறைப்பட்ட 
இக்குஞ்சுளுக்கு... 

தலைசாய்த்திட தாய்மடியில்லை 
தரையே 
தலையணையும் தாய்மடியுமாய்..!!! 

முத்தமிட அன்னையில்லை 
மேககன்னியே 
முத்தமிடும் அன்புத்தாய்..!!! 

உணவும் உறைவிடமும் 
இலவசம் 
உணர்வுகளும் கனவுகளும் 
அடுப்பில்..!!! 

நேசிப்பாரில்லா இம்மலர்களெல்லாம் 
அரசியல்வாதிகளின் 
பிறந்தநாளுக்கு விளம்பரம் 
கட்டணமாய் ஒருவேளை சாப்பாடு...!!! 

கலியுகமிது 
வேலியே பயிறுகளை மேய்கிறது 
வேலியில்லா 
இப்பூந்தோட்டத்தின் நிலையென்ன..!!! 


இல்லையென்று வருந்துவோரெல்லாம் 
வாருங்களிங்கே 
ஆயிரம் குரல்கள் அம்மா என்றழைக்க 
ஆயிரம் கரங்கள் கண்ணீரை துடைக்க..!!! 

வாசிப்போரில்லா 
இம்மழலை கவிதைகளை வாசியுங்கள் 
ஒவ்வொரு கவிதையிளும் 
வாழ்க்கையென்று மறைந்துகிடக்கு...!!!! 

இக்கண்ணீர பூக்களுக்கு 
அன்பை காணிக்கையாக்குங்கள்..!!


--- சுதா --- 

Wednesday 5 February 2014

ஓ நயாகராவே பனியாக உறைந்ததேன்..!!!





ஓ நயாகராவே 
அந்தப் பாறை முகடுகளில் 
பாட்டொன்றை 
பாடிக் கொண்டிருந்தாயே 
இன்று 
மௌனமானதேன்...??? 

மௌனப் போராட்டமா..??? 
பணியை விடுத்து 
படர்ந்துள்ளாய் 
வெண்ணிற கொடியோடு..!!! 

ஓய்வின்றி ஓடி ஓடி 
களைத்து விட்டாயோ..? 
இன்று 
ஓடாமல் ஓய்வெடுக்கிறாய்..!!! 

பாய்ந்தோடும் நீர்ப் படலம் 
பனிப் பூ பூங்காவாகி 
பாய்ந்தோடாமல் நிற்கிறதே..!!! 

எந்த கறையான் 
உன் பளிங்கு உடலில் 
பனிப் புற்றெழுப்பியது..??? 

மலையில் முக கண்ணாடியாக 
தொங்கி கொண்டிருந்தாயே 
இன்று 
பனிக் கண்ணாடியாக சிதைந்ததேன்..!! 

தொட்டால் கலைந்துவிடும் 
நீர்க் கோலமே - இன்று 
கலைந்து பனிப் புள்ளிகளானாயே..!!! 

பசியறிந்து பாலுட்டும் 
தாயாக 
வனம் வயலுக்கெல்லாம் 
பாய்ந்தோடி பாலுட்டினாயே 
இன்று 
பனியாக உறைந்ததேன்..??? 

அருவியாக வீழ்ந்து 
ஆறாக எழுச்சியடைந்து 
அழகாக எடுத்துரைத்தாய் 
வீழ்ச்சியில் எழுச்சியென்று 
இன்று 
நீயே வீழ்ந்ததேன்...? 

திரவ தேக தேவதையே 
அகத்திலென்ன தீராத சோகமா ? 
நேற்று வரை 
வெண் புகையாக புகைந்து 
இன்று 
பனியாக உறைந்து விட்டாய் .!!!! 

ஓ அழகியே 
எழுந்து வா...!!!


--sutha--

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு..!!!



வரலாற்றை தின்று செறித்த 
கறையானுக்கு தெரியும் 

கன்னித்தமிழில் எழுதியதால் 
பனை ஓலையும் 
கற்கண்டாய் இனித்ததென்று..!! 

மறத் தமிழனை கண்டால் 
மதக்களிறு மண்டியிடும் 
வேங்கை வெகுண்டோடுமென்று..!!!! 


அன்று 
வாளும் உறையுமாய் தமிழர்கள் 

அதோ அந்த இமயம் 
தமிழ்க் கொடியை தாங்கி நின்றது 
இதோ இந்த வங்காள விரிகுடா 
தமிழெல்லையாய் படர்ந்திருந்தது..!!!! 

இல்லையென்ற குறையின்றி 
அள்ளி கொடுத்து வாழ்ந்தனர்..!!! 


இன்று 
இரைத் தேடிப் போன 
பறவைகளைப் போல பிரிந்துள்ளோம் 
நம் கோட்டையிலே 
நரிகள் ஊளையிடுகிறது...!!! 

ஓநாய்கள் வேட்டையாடுகிறது 
தமிழ் சிங்கங்ககளை 
பூனைகள் விரட்டுகிறது 
புலியை விரட்டிய மங்கையரை..!!! 

தங்கமது மண்ணில் 
மறைந்துள்ளதைப் போல 
மக்களோடு மக்களாய் 
உலகெங்கிலுமுள்ள தமிழர்களே..!!! 

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 
மறந்தாயோ ? 

அணுக்களிரண்டு சேர்ந்ததால் 
அண்டத்தை ஆளும் 
கதிரவன் தோன்றினான் 

தமிழர்கள் ஒன்று சேர்ந்தால் 
அகிலத்தையே ஆளலாம்..!!! 

அலை 
கூடி .. கூடி .. 
வந்ததால் உடைகிறது கரை 

தமிழர்கள் கூடினால் 
எதிரிகளின் 
இடுப்பொடித்து அடுப்பெரிக்கலாம்..!!!! 

காற்று கைகோர்த்து 
ஓடி.... ஓடி.... 
வளைக்கிறது மரத்தை 

தமிழர்கள் கைகோர்த்தால் 
தமிழீழம் பிறந்து 
ஈழத்தில் கண்ணீர் மறையும்..!!! 

பாதரசம் போல 
புறத்திலே சிறு துளியாயினும் 
அகத்திலே 
உச்ச உஷ்ணத்திலும் 
உருகாத உலோகமான தமிழர்களே..!!! 

ஒன்று சேராத துளிகள் 
குளத்தை நிரப்புவதில்லை 
ஒன்று கூடுங்கள் இல்லையன்றால் 
நாளை 
நம் குஞ்சுகள் வாழ கூடு இருக்காது..!!!

--sutha--

பத்மபூஷண் வைரமுத்து அய்யாவிற்கு வாழ்த்து..!!!



13-7-1953 அன்று 
பாண்டிய நாட்டில் பிறந்தது 
இந்த 
கள்ளிக்காட்டு இதிகாசம்..!!! 

தமிழை அரண்போலக் காத்து 
காலத்திற்கேற்ப 
உருமாற்றிக் உயிர்ப்பிக்க 

வள்ளுவன் இளங்கோவடிகள் கம்பன் 
பாரதி பாரதிதாசன் கண்ணதாசனென்று 
தமிழன்னை தோற்றிவிப்பாள் 
காலத்திற்கொரு புலவனை 
அந்தவரிசையில் இன்று வைரமுத்துவும்..!!! 

அவன் 
பூக்களின் புதல்வன் 
தாவரங்களின் தோழன் 
கருப்பு வைரம் 
சூரியனை செரித்தவன் 
புதுக் கவிதையின் ஆணி வேர்..!! 

தமிழின் காவலனே 
நீ 
கற்பனை சிறகேறி 
கனவுலகை அளந்தவன் 
தென்றலை துணைக்கழைத்து 
முக்காலத்திலும் சுற்றியவன் 
அலைகளின் முதுகேறி 
தொடுவானத்தை தொட்டவன்..!! 

உன் 
விரல் எழுதாத 
பாடு பொருளுண்டோ 
குரல் 
முழங்காத கவியுண்டோ..!!! 

இந்த 
காற்று மண்டலமெங்கும் 
ஒலிக்கிறது உன் கானம்..!!!! 

உன் 
காதல் கீதங்கள் 
இளைஞர்களின் தேசியகீதம் 
சோக கீதங்கள் 
கண்ணீருக்கு மருந்து 
தத்துவங்கள் 
வாழ்க்கையின் வழிகாட்டி..!!! 

மலர் அழகு 
அதில் தொடுத்த மாலை பேரழகு 
அதுப் போல 
தமிழ் சுவைமிக்கது 
அதில் நீ புனையும் 
சொல்லிலொரு புதுச் சுவையுண்டு 
கவியிலொரு அகமுண்டு 
கவித்தொகுப்பில் நூறு முகமுண்டு..!!! 

தமிழை நீ வளர்த்தாய் 
தமிழ் உன்னை வளர்த்தது 
அகவை அறுபதில் 
நாளை 
மணிவிழா கொண்டாடுமுனக்கு 
இன்றே 
மத்திய அரசு சூட்டியது 
பத்மபூஷணென்ற மணிமகுடத்தை..!!! 

நீ எழுதிய நூல்கள் 
வாங்கிய விருதுகளையெல்லாம் 
எண்ண முடியவில்லையே.. 
சொல் கவியே 
உன் வீட்டில் எத்தனை அலமாரி..!!!!! 

நீ 
ஞானம் அறிவு குணம் 
புகழ் பண்பிலெல்லாம் 
சூரியனைப் போல உச்சத்தில் 
நான் 
சூரியனுக்கு வாழ்த்தெழுதும் 
சூத்திரமறியா சிறுபிள்ளை ..!!! 

ஆதலால் 
புன்சிரிப்பு மாறாமல் 
புது வேகம் குறையாமல் 
புதுப்பாதை நிறைவோடு 
பல்லாண்டு வாழ்ந்திருக்க 
கவிப்பேரரசே உனை வாழ்த்தி 
தலை வணங்குகிறேன்...!! 


--sutha--

வைரமுத்து தண்ணீர் தேசம் | vairamuthu thaneer desam


vairamuthu thaneer desam


பத்மபூஷண் வைரமுத்து  அவர்கள் எழுதிய தண்ணீர் தேசம் நாவலை  படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணவும்.

vairamuthu thaneer desam Click here to read

இந்த நாவல் 1996 - ல் ஆனந்த விகடனில் வெளிவந்தது.

ஒவ்வொரு வரியும் நம் மனதை கரைத்து விடும்..

Wednesday 25 December 2013

கவிஞன் விஞ்ஞானியானால்..!!!



==பூமி==

இருபத்தி மூன்றரை
சாய்வு கோணத்தில்
பரதமாடும் பெண்...!!!

பரதத்தின் பாத சுவடுகள்
நீள்வட்ட கோலம்..!!!


==நிலா==

சுழல் ஆணியின்றி
அந்தரத்தில்
சுழலும் பம்பரம்..!!!

கதிரவனின் கதிரொளியை
குளிர்விக்கும்
கோல குளிர்விப்பான்..!!!

தினகரனை பூமிக்கு
எதிரொளிக்கும்
பாதரச கண்ணாடி ..!!!

==வானம்==

கணக்கில்லா உயிர்கோலங்களை
உள்ளடக்கிய
எல்லையில்லா அமேசான் காடு..!!!

பகலவன் ஒளிக் கீற்றில்
வேய்ந்த
நீலக் கற்பனைக் கூரை ...!!!

ராகத்தோடு பூமியின் தாகம்
தணிக்கும்
மேகக் குடங்களின் தோட்டம் ...!!!

==வானவில்==

திரவ தேகத்தை சிதைத்து
கார்மேகமது
சிந்துகிறது திரவ முத்தை..!!!

பரிதியவன் பார்வை
திரவ மேனியில் தெறித்து
ஏழு வண்ண வட்டமானது ..!!!

==கடல்==

பூமகள் உடலில்
படர்ந்துள்ள
உவர்ப்பு நீர்படலம்..!!!

அறிவியல் அறியாத
உயிர்களின்
அதிசய உலகம்..!!!

சரித்திரத்தை கரைத்து
கரையாத
சரித்திரமான கரைப்பான்..!!!


==அணுக்கரு பிளவு==

கவிஞனின் கற்பனைப் போல
துகளொன்று இரண்டாகிறது
இரண்டு நான்காகி எட்டாகி
.
.
.
தொடர்கிறது முடிவிலியாக

கட்டுபடுத்தினால்
அணு உலையெனும் கவிதை
கட்டுபடுத்தாவிட்டால்
வெடி குண்டெனும் அழிவு ..!!!!

---இது ஒரு கற்பனை---