Wednesday 25 December 2013

கவிஞன் விஞ்ஞானியானால்..!!!



==பூமி==

இருபத்தி மூன்றரை
சாய்வு கோணத்தில்
பரதமாடும் பெண்...!!!

பரதத்தின் பாத சுவடுகள்
நீள்வட்ட கோலம்..!!!


==நிலா==

சுழல் ஆணியின்றி
அந்தரத்தில்
சுழலும் பம்பரம்..!!!

கதிரவனின் கதிரொளியை
குளிர்விக்கும்
கோல குளிர்விப்பான்..!!!

தினகரனை பூமிக்கு
எதிரொளிக்கும்
பாதரச கண்ணாடி ..!!!

==வானம்==

கணக்கில்லா உயிர்கோலங்களை
உள்ளடக்கிய
எல்லையில்லா அமேசான் காடு..!!!

பகலவன் ஒளிக் கீற்றில்
வேய்ந்த
நீலக் கற்பனைக் கூரை ...!!!

ராகத்தோடு பூமியின் தாகம்
தணிக்கும்
மேகக் குடங்களின் தோட்டம் ...!!!

==வானவில்==

திரவ தேகத்தை சிதைத்து
கார்மேகமது
சிந்துகிறது திரவ முத்தை..!!!

பரிதியவன் பார்வை
திரவ மேனியில் தெறித்து
ஏழு வண்ண வட்டமானது ..!!!

==கடல்==

பூமகள் உடலில்
படர்ந்துள்ள
உவர்ப்பு நீர்படலம்..!!!

அறிவியல் அறியாத
உயிர்களின்
அதிசய உலகம்..!!!

சரித்திரத்தை கரைத்து
கரையாத
சரித்திரமான கரைப்பான்..!!!


==அணுக்கரு பிளவு==

கவிஞனின் கற்பனைப் போல
துகளொன்று இரண்டாகிறது
இரண்டு நான்காகி எட்டாகி
.
.
.
தொடர்கிறது முடிவிலியாக

கட்டுபடுத்தினால்
அணு உலையெனும் கவிதை
கட்டுபடுத்தாவிட்டால்
வெடி குண்டெனும் அழிவு ..!!!!

---இது ஒரு கற்பனை---

Wednesday 18 December 2013

என் மழைத் தோழியுடன்..!!!




நேற்று
ஊரெங்கும் கதவடைப்பு
தென்றலது ஜன்னலை தட்டிட
எட்டி பார்த்தேன் ...!!!!

என் தோழியவள்
விண்ணுலக தேவதை
மண்ணுலகம் வந்திருந்தாள்..!!!

மகிழ்ச்சியில் மயிலாகி
தோகை விரித்து ஆடினேன்
ஆனந்தத்தில்
அகவை குறைந்தது கணிசமாக
பத்து வயது
பட்டாம் பூச்சியானேன்..!!!

சிறகடித்து
கட்டியணைத்தேன் நெஞ்சோடு
அள்ளி முத்தமிட்டேன்
அவளின் கோள உடலெங்கும்..!!!

தொட்டால் சிதைந்து போகும்
பளிங்கும் மேனி பாவையவள்
பிரம்மன் படைக்காத அதிசயமே..!!!

வானுக்கும் பூமிக்கும்
நீர் பாலமமைத்து
நிலமகளை நீராட்ட வந்த
திரவ தேக முத்தவள்...!!!


பயண களைப்பிலே
படுத்துறங்கினாள்
பூமகளின் மடியிலே..!!!

நொடியில் துயில் கலைத்து
புறப்பட்டாள்
கொஞ்சம் ஓய்வெடு என்றேன்..!!!

ஓய்வா ..?? எனக்கா..??

நான்
வீட்டிலே அடைந்து கிடக்க
பூலோக கன்னியுமல்ல
படுக்கையிலே படுத்து கிடக்க
பொறுப்பில்லா பாலகனுமல்ல

படி தாண்டி வா என்னோடு
கடமைகள்
மலையாய் குவிந்துள்ளதென்று
கனத்த குரலில்
கன்னத்தில் அறைந்தாள் ..!!!

புறப்பட்டேன் அவளோடு...

வழியில் நின்ற தடைகளை
உளியின்றி உடைத்து
தன்னோடு கட்டியிழுத்து
சீறிப் பாய்ந்தோடினாள்..!!!

மனித கிருமிகளால்
தாவரங்களுக்கு இரத்தசோகை
வேர்களில் ரத்தமாய் பாய்ந்து
நோய் தீர்த்தாள்...!!!

வெட்டிய மரத்தின்
உயிரில்லா விதைகளுக்கு
தன்னை மண்ணில் மரித்து
உயிர் கொடுத்தாள் ...!!!

குளம் குட்டைகளில் நிரம்பி
பாலையான விவசாயின்
கண்களை சோலையாக்கினாள்...!!!

கட்டியிழுத்து வந்ததை
தங்க துகளாக்கி
கரையெங்கும் தூவி
கடல் அன்னையோடு கலந்தாள்..!!!

கடமை முடியவில்லை
மேக கன்னிகளோடு
மீண்டும் வருவேனென்று

பரிதியின் பார்வையிலே
உடன்கட்டை ஏறி
ஆவியாகி பறந்தாள்..!!!

கடற்கரையில் தனி மரமாய்
நின்றிருந்தேன்
தோழியவளின் வருகைக்காக..!!

------ சுதா -------

Wednesday 4 December 2013

கும்மி பாட்டு புதுசு..!!!!






கும்மியடி பெண்ணே கும்மியடி
தமிழிலோர் பாட்டு பாடி
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

சித்திரையும் பொறந்ததடி
சின்ன புள்ள தலையில
ஆங்கில உஷ்ணமும் ஏறுதடி
தணிக்க தமிழிலோர் பாட்டெழுதி
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

வைகாசி வைபோகமும் காணலடி
விலைவாசியும் ஏறுதடி
வீடாகும் விளைநிலத்தை காத்து
விவசாயத்தை வளர்ப்போமென
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

ஆனியில ஊத காத்தும் வீசலடி
உச்சி வெயிலும் தணியலடி
ஊரோரம்
மரமொன்ன நடுவோமென
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

ஆடிப்பட்டம் வந்ததடி
அரசியல் வெள்ளமும் ஓடுதடி
அதிலே
நல்லதொரு ஆட்சியை விதைத்போமென
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

ஆவணி பொறந்ததடி
பொன்னு விளையும் பூமியிலே
நட்ட நாத்தெல்லாம் சாகுதடி
செயற்கையை அழித்து
மண்ணோட மாசு நீக்குவோமென
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

புரட்டாசி விரதமெல்லாம் துரிதமாக
துரித உணவோடு முடியுதடி
அகமும் புறமும் பக்குவமாக
மாதமொரு விரதமெடுத்து
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

ஐப்பசி அடைமழையும் பொழியலடி
பொழிந்தாலும் வீணாக போகுதடி
சேகரிக்க குளமொன்ன வெட்டி
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

இல்லத்தில் இன்பம் பொங்கிட
கார்த்திகையில்
வீடெங்கும் விளக்கேற்றி
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

மார்கழியில்
மணி எட்டு வரை தூங்காதீர்
ஆயுளை நீட்டிட
ஆதவனுக்கு முன்யெழுந்து
அழகு கோலமிட்டு
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

தை பிறந்தும்
தமிழினத்துக்கு வழி பிறக்கலடி
போராட
தமிழர்களை ஒன்று திரட்டி
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

மாசியில் மாலையிட்டு
மறுநாளே விவாகரத்து கேக்காதிங்க
மனம் விட்டு பேசி
மகிழ்ச்சியாக வாழ்வோமென்று
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

பங்குனியில்
பழந் தமிழ் பண்பாட்டிலே
ஊரெங்கும் விழாயெடுத்து
தெருவெங்கும் தேரோட்டி

கும்மியடி பெண்ணே கும்மியடி
தமிழிலோர் பாட்டு பாடி
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!
---sutha----