Wednesday 13 November 2013

கவிஞர்களே ஊன்றுவோம் விதையொன்றை..!!!



புலவர்களே புலவர்களே

ஒன்றுகூடி எழுப்புங்கள்
எழுத்திலோர்
ஓலைக் குடிசையை...!!!

தமிழனில்லை தமிழகத்தில்
தமிழன்னையும்  தமிழினமும்
நிழலின்றி அலைகிறது ..!!!


கவிஞர்களே கவிஞர்களே

கவிதையிலே கண்டறியுங்கள்
நவீன
பாதுகாப்பு ஆயுதமொன்றை ...!!!

அரசியல் நரிகள் ஊளையிடுகிறது 
பயந்து
நடுங்குகிறாள் பாரதத்தாய் ..!!!


கவித் தோழிகளே தோழிகளே

கவி ஏடுகளை இணைத்து
ஆடையொன்றை
கச்சிதமாய் தைத்திடுங்கள்

அயலார்  கலாச்சாரத்தில்
தமிழர்களின்
அங்கம் தெரிகிறது !!!


கவித் தோழர்களே தோழர்களே

கவிக்கோலை தூண்டு கோலாக்கி
கவி வரிகளை
தீயதை தீய்க்கும் நெய்யாக்குங்கள்...!!l

தேசத் தீபங்கலெல்லாம்  
போதை இருளில்
ஆனந்தமாக உறங்குகிறது...!!!


எழுத்தாளர்களே எழுத்தாளர்களே

எழுதுகோலின் மையிலே
மகத்தான மருந்தொன்றை
உருவாக்குங்கள்...!!!

செயற்கையெனும் கிருமிகளால்
இயற்க்கையன்னை
நோயுற்று இன்னல்படுகிறாள்..!!!


கவித் தோழர்களே தோழிகளே

ஊன்றுவோம் ஊன்றுவோம்
நாளும்
நற்க் கருவொன்றை ஊன்றுவோம்...!!!

நாளை
விருட்சமாகி தோப்பாகி
தூய்மைப்  படுத்தட்டும்
மாசடைந்த மானுடத்தை  !!!

---Sutha---

Monday 11 November 2013

பூவும் பெண்ணும் !!!



பெண் பூவே
நீ

அழகிலே ஆம்பல்
முல்லை முகமானவள்
காந்தள் கண்கள்
வள்ளி விழிகள் !!


புருவம் பசும்பிடி
கருவிள கன்னம்
பாதிரிப் பார்வை
செருந்தி செவ்விதழ் !!


நெய்தல் நெற்றி
தாழை தாடை
மாம்பூ மூக்கு
பற்கள் பயினி !!


செங்கொடுவேரி செவி
நாக்கு நறவம்
குருகிலை கழுத்து
கூவிளம் கூந்தல் !!


தொண்டை தணக்கம்
கரங்கள் காயா
மணிக்கட்டு மரவம்
வேரல் விரல்கள் !!


அகங்கை அடும்பு
புறங்கை பிடவம்
கைநகம் கைதை
உந்தூழ் உடல் !!


தாமரை தேகம்
தேமாம்பூ தோள்
நெஞ்சு நாகப்பூ
மணிச்சிகை மார்பு !!


இலவம் இடை
முதுகு மருதம்
தோன்றித் தொடை
கால்கள் காழ்வை !!


கருங்குவளை கனுக்கால்
கால்விரல்கள் காஞ்சி
பாதம் பாலை
தளவம் தசை !!


குரல் குரவம்
பேச்சு போங்கம்
நடையிலே நரந்தம்
கரந்தை கண்ணியம் !!


மௌனத்திலே மௌவல்
கோங்கம் கோவம்
ஞானயத்திலே ஞாழல்
புன்னகையிலே புன்னை !!


வெட்கத்தில் வெட்சி
குணத்திலே குருக்கத்தி
பண்பிலே பாங்கர்
கருணையிலே காந்தள் !!


கொள்கையிலே கொன்றை
தூய்மையிலே தும்பை
வீரத்திலே வேங்கை
பாசத்திலே பகன்றை !!


மென்மையிலே அனிச்சம்
நம்பிக்கையில் நந்தி
அறிவியலிலே ஆத்தி
குறிஞ்சி குலத்தவளே !!


சேவைச் செம்மல்
திலக திருமங்கை
வாகைப் பூ சூடி
வாழையாகி குலம் காக்கும்
குலமகள்!!

--Sutha--

Friday 8 November 2013

புரட்சி செய்..!! புரட்சி செய்..!!



அளவில்லா ஆற்றலுடையவள்
அஞ்சியதால் தானோ ? உனை
அழிக்கிறார்கள் கருவிலே
அறியாமையை நீக்கி !!

அணுவைப் போல பிளந்து
ஆற்றல் பிழம்பாகி
அந் நயவஞ்சகர்களை பொசுக்கி
ஆளுமை புரட்சி செய் !!

கருக்கலைப்பைக் கடந்தாலும்
கள்ளிப் பாலாபிசேகமிட்டு
கொல்லுகிறார்கள் உன்னோடு
குலத்தின் ஈராயிரம் சிசுவையும் !!

அறிவெனும் ஆயுதத்தை தீட்டி
அக்கயவர்களின் சிரத்தை சீவி
அறிஞர்களை மிஞ்சுமளவு ஆராய்ந்து
அறிவியலிலே புரட்சி செய் !!

கழிவாக கழிவறையிலும்
குப்பையாக குப்பையிலும்
கொன்று வீசுகிறார்கள் பிரம்மனின்
குழந்தை நீயென அறியாதோர்

உலகமில்லை நீயில்லையெனில்
உடைத்தெறி அடக்குமுறையை
உனக்கோர் பாதையில் அயராது
உழைத்து தொழில் புரட்சி செய் !!

மலர்ந்து மங்கையானதும்
மனித தசைத் தின்னிகள்
மலரின் கற்பை கொத்தி
மயானத்தில் புதைக்கிறார்கள் !!

நவீன கலையறிந்து அந்த
நச்சு நாகங்களை
நறுக்கி கழுகுக்கு கூறிட்டு
நல்லதொரு வீரப் புரட்சி செய் !!

வீட்டிலே அடிமையாக்கி
விலைப் பேசி விலங்கிட்டு
விடுதலையில்லா கைதியாக
விற்கிறார்கள் திருமணத்தில் !!

சிறைவாசியாகவே சாகாதே
சுயநலவாதிகளை சூறையிட்டு
சீறிப் பெண்ணடிமையை ஒழித்து
சுதந்திர புரட்சி செய் !!!

விதியினலே விதவையாகி
வாழ்வை இழந்தவளுக்கு
வீட்டிலே தினம் தினம்
வார்த்தையிலே கருமாதி

வண்ண பூந்தோட்டத்துக்கு
வெள்ளை உடையுடுத்தும்
கருப்பு சமூதாயத்தை தீயிட்டு
கொளுத்தி சமூதாய புரட்சி செய் !!

--தொடரும் --
--Sutha--

ஆதலால் காதல் செய்வீர் அன்னை மொழியை !!!



தமிழா நான் ..!!!

கல் தோன்றி மன் தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய மூத்த குடியில் பிறந்து
அகத்தியனின் ஞானம் பெற்று ..!!

பிள்ளைத்தமிழில் தாலாட்டி
அவ்வை மடியில் தவழ்ந்து
நெல்லியூட்டி வளர்த்தான் அதியமான் ..!!

முச்சங்கமிட்டு முக்கனி சுவையுடன்
மூதறிஞர்களால் முத்தமிழாக முடிச்சூடி
கரைபுரண்டேன் காவேரி அன்னையாக ..!!

மூவேந்தர்களின் வாளில் திலகமாகி
ஈழம் தொட்டு இமயத்தில் கொடிநாட்டி
வங்காளயெல்லை தாண்டியது வீரம் ..!!

திரிகடுகத்தில் தீரா நோய் தீர்த்து
கம்பரின் கற்பனைக்கு காதலியாகி
விடுதலை வேங்கையானேன் பாரதியால் ..!!

வீரமாமுனிவரால் பாரெங்கிலும் பவனிகொண்டு
வள்ளுவனால் உலகப் பொதுமறையாகி
வான் புகழ் அடைந்தேன் நேற்றுவரை..!!

தமிழா இன்று ..!!!

அலமாரியில் உறங்குகிறேன்
அரசியலுக்கு விளம்பரமாகி
ஊடகத்தில் கற்ப்பையிழக்கிறேன் ..!!

விதவையாக்கி விளையாடுகிறான் அந்நியன்
அனாதையாக மாண்டுபோகிறேன் வீதியிலே
ஈழத்தில் எம் மங்கையர் போல ..!!

தமிழா நாளை ..!!!

ஆங்கிலத்துடன் கலப்பு திருமணமாகும்
தமிழில் பேசினால் பரிசென்பார்கள்
அருங்காட்சியகத்திலே காட்சியளிப்பேன் ..!!

மலட்டு மொழியென பட்டம் பெற்று
தூசு படிந்து கரையானுக்கு இரையாவேன்
ஈழத்தில் எம்மினத்தைப் போல ..!!

நீ அன்னியமொழிக்கு அடிமையாகி
முகவரியிழந்து மூழ்கிவிடுவாய் இலமூரியாவாக
ஆதலால் காதல் செய்வீர் அன்னை மொழியை ..!!

இப்படிக்கு
தமிழ் மொழி

-- Sutha--
 

முப்பொழுதும் உன் கற்பனையில்..!!!


வேடனாக
பேச்சைப் பொறியாக்கி
பார்வையை வலையாக்கி
சிறு புன்னகையில்
சிறைப் பிடித்தாய் ...!!

கள்வனாக
கனவுக்குள் நுழைந்து
உள்ளத்தில் ஊஞ்சலாடி
இதயத்தைக் களவாடினாய் ...!!

நண்பனாக
நாளும் நகையாடி
அன்பில் அரவணைத்து
ஆட்கொண்டாய் ஆழ்மனதை ...!!

காதலனாகினாய்
தூக்கத்தை துறந்தேன்
வண்ணக் கனவுகளில் தினமும்
வாழ்ந்தேன் உன்னோடு ...!!

எதிரியாக
எனை நீங்கினாய்
இதயம் இடம்பெயர்ந்த சேதி
உன்னிடம் சொன்னதும் ...!!

கவிஞனாக
இன்று என்னுள் நுழைந்து
கற்பனையை எழுத்தாக்கி
கவி பாடவைத்தாய் ...!!

மன்னவனே
மதி வருவதற்குள்
மாலையிட நீ வருவாயென
முப்பொழுதும் உன்கற்பனையில் நான் ...!!


By Sutha