Friday 8 November 2013

ஆதலால் காதல் செய்வீர் அன்னை மொழியை !!!



தமிழா நான் ..!!!

கல் தோன்றி மன் தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய மூத்த குடியில் பிறந்து
அகத்தியனின் ஞானம் பெற்று ..!!

பிள்ளைத்தமிழில் தாலாட்டி
அவ்வை மடியில் தவழ்ந்து
நெல்லியூட்டி வளர்த்தான் அதியமான் ..!!

முச்சங்கமிட்டு முக்கனி சுவையுடன்
மூதறிஞர்களால் முத்தமிழாக முடிச்சூடி
கரைபுரண்டேன் காவேரி அன்னையாக ..!!

மூவேந்தர்களின் வாளில் திலகமாகி
ஈழம் தொட்டு இமயத்தில் கொடிநாட்டி
வங்காளயெல்லை தாண்டியது வீரம் ..!!

திரிகடுகத்தில் தீரா நோய் தீர்த்து
கம்பரின் கற்பனைக்கு காதலியாகி
விடுதலை வேங்கையானேன் பாரதியால் ..!!

வீரமாமுனிவரால் பாரெங்கிலும் பவனிகொண்டு
வள்ளுவனால் உலகப் பொதுமறையாகி
வான் புகழ் அடைந்தேன் நேற்றுவரை..!!

தமிழா இன்று ..!!!

அலமாரியில் உறங்குகிறேன்
அரசியலுக்கு விளம்பரமாகி
ஊடகத்தில் கற்ப்பையிழக்கிறேன் ..!!

விதவையாக்கி விளையாடுகிறான் அந்நியன்
அனாதையாக மாண்டுபோகிறேன் வீதியிலே
ஈழத்தில் எம் மங்கையர் போல ..!!

தமிழா நாளை ..!!!

ஆங்கிலத்துடன் கலப்பு திருமணமாகும்
தமிழில் பேசினால் பரிசென்பார்கள்
அருங்காட்சியகத்திலே காட்சியளிப்பேன் ..!!

மலட்டு மொழியென பட்டம் பெற்று
தூசு படிந்து கரையானுக்கு இரையாவேன்
ஈழத்தில் எம்மினத்தைப் போல ..!!

நீ அன்னியமொழிக்கு அடிமையாகி
முகவரியிழந்து மூழ்கிவிடுவாய் இலமூரியாவாக
ஆதலால் காதல் செய்வீர் அன்னை மொழியை ..!!

இப்படிக்கு
தமிழ் மொழி

-- Sutha--
 

No comments:

Post a Comment